ஹதீஸ் எண்: 152
'அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் (தபூக் யுத்த பயணத்தின் போது) பின் தங்கி விட்டார்கள்' என்று முகீரா (ரலி) அவர்கள் இந்த சம்பவத்தை கூறி தொடர்ந்து பின்வருமாறு அறிவிக்கின்றார்கள். நாங்கள் மக்களிடம் வரும்போது அப்துற்ரஹ்மான் பின் அவ்ப் (ரலி) அவர்கள் மக்களுக்கு சுப்ஹ் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். அவர் நபி (ஸல்) அவர்களை கண்டதும் (அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நடத்துவதற்காக) அவர் பின்னால் வர விரும்பினார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அவரை நோக்கி அவர் (தொழுகையை) தொடரும்படி சைகை செய்தார்கள். நானும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அவருக்குப் பின்னால் ஒரு ரக்அத்தை தொழுதோம் அவர் ஸலாம் கொடுத்ததும் நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்று விடுபட்ட ரக்அத்தை தொழுதார்கள். அவர்கள் அதைவிட வேறு எதையும் அதிகமாகச் செய்ய வில்லை.

இமாம் அபூதாவூது குறிப்பிடுகிறார்கள்:
(ஜமாஅத்) 'தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைபவர் சஜ்தா சஹ்வு செய்ய வேண்டும்' என்று அபூசயீத் அல்குத்ரீ இப்னு உவர் ஆகியோர் தெரிவிக்கின்றனர்.

ஹதீஸ் எண்: 153
அபூ அப்துற்றஹ்மான் அஸ்ஸலமீ என்பார் அப்துர்ரஹ்மான் பின் அவ்ப் (ரலி) அவர்கள் முன்னிலையில் இருந்தனர். அப்போது அப்துர்ரஹ்மான் பின் அவ்ப் (ரலி) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களிடம் உலூவின் முறையைக் கேட்டனர். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'தனது தேவையை நிறைவேற்ற செல்வார்கள். நான் அவர்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வேன். அவர்கள் உலூச் செய்வார்கள். தனது தலைப்பாகையின் மீதும் காலுறைகள் மீதும் மஸஹ் செய்து கொள்வார்கள்' என்று பதிலளித்தனர் என்று அபூஅப்துல்லாஹ் அறிவிக்கின்றார் என இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்.

அபூஅப்துர்ரஹ்மான் அஸ்ஸலமீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பாளர் தைம் பின் முர்ரா கிளையாரின் அடிமையான அபூஅப்துல்லாஹ் என்பவராவார்.

ஹதீஸ் எண்: 154
ஜரீர் (ரலி) அவர்கள் சிறுநீர் கழித்தார்கள். பின்னர் உலூச் செய்து தனது காலுறைகளுக்கு மஸஹ் செய்தனர். பிறகு அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களை நான் மஸஹ் செய்யக் கண்டிருக்கும் போது (அவ்வாறு) நான் மஸஹ் செய்வதை எது தடுத்திட முடியும்? என்று கூறினார். (உடனே) தோழர்கள் கால்களை கழுவிக் கொள்ளுங்கள் என்ற வசனம் உள்ளடங்கிய மாயிதா என்ற அத்தியாயம் இறங்குவதற்கு முன்பு தானே (அனுமதிக்கப்பட்டது?) என்று வினவியதும் அவர் நான் மாயிதா என்ற வசனம் இறங்கிய பின்பே தவிர இஸ்லாமாக வில்லை என்று பதிலளித்தனர்.

அறிவிப்பவர்: அபூசுர்ஆ அவர்கள்.

ஹதீஸ் எண்: 155
நஜ்ஜாஷி (மன்னர்) அவர்கள் இரண்டு சாதாரண கருப்பு நிற காலுறைகளை அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்புச் செய்தார். அவ்விரண்டையும் அவர்கள் அணிந்து கொண்டார்கள். பின்னர், உலூச் செய்து கால்களை கழுவுவதற்கு பதில் அவ்விரண்டின் மீது மஸஹ் செய்தார்கள்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி) அவர்கள்.

ஹதீஸ் எண்: 156
அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் காலுறைகளுக்கு மஸஹ் செய்தார்கள். அப்போது நான் அவர்களிடம் அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே! நீங்கள் (கால்களை கழுவ) மறந்து விட்டீர்களா? என்று வினவியதற்கு நீர் தான் மறந்து விட்டீர். இ(வ்வாறு மஸஹ் செய்வ)தையே இறைவன் கட்டளையிட்டுள்ளான் என்று அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: முகீராபின் ஷுஃபா (ரலி) அவர்கள்.

பாடம்: 60 காலுறைகளை மஸஹ் செய்யும் கால வரம்பு.

ஹதீஸ் எண்: 157
காலுறைகளை மஸஹ் செய்யும் காலம் பயணிக்கு மூன்று நாட்களாகும். உள்ளூர்வாசிக்கு ஒரு பகலும் ஒரு இரவுமாகும் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: குஜைமா பின் சாபித் (ரலி) அவர்கள்.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்:
தனது இஸ்நாத் மூலம் (இதை) இப்றாகீம் அத்தைமீ என்பாரிடமிருந்து மனசூர் பின் அல்முஃதமர் அறிவிக்கும் போது இந்த காலவரையை நீங்கள் நீட்டிக் கேட்டிருந்தால் நபி (ஸல்) அவர்கள் நீட்டித்தந்திருப்பார்கள் என்று அறிவிக்கின்றார்.

ஹதீஸ் எண்: 158
உபைப் பின் இமாரா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே! நான் இருகாலுறைகளின் மீதும் மஸஹ் செய்யலாமா? என்று வினவியதும் அவர்கள் 'ஆம்' என்றனர். ஒரு நாள் (முழுவதும் செய்யலாமா?) என்று அவர் வினவியதும் அண்ணலார் அவர்கள் ஒருநாள் (முழுதும் செய்யலாம்) என்றனர். இரு நாட்கள் (வரை செய்யலாமா?) என்று அவர் வினவ அண்ணலார் அவர்கள் இருநாடகள்! (வரை) என்று பதிலளித்தார்கள். மூன்று நாட்கள் (வரை செய்யலாமா?) என்று அவர் வினவ அண்ணலார் அவர்கள் 'ஆம்' நீர் விரும்பிய நாட்கள் வரை என்று பதிலளித்தார்கள்.

அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களுடன் இரு கிப்லாக்களை (பைத்துல் மக்தஸ், கஃபா) முன்னோக்கித் தொழுதவர் என்று உபை பின் இமாரா (ரலி) அவர்களைப் பற்றி இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஹ்யா பின் அய்யூப் என்பார் குறிப்பிடுகின்றார்.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்.
இப்னு அபூமர்யம் என்பார் அறிவிக்கும் தனது ஹதீஸில் (நாட்களை நீட்டிக் கொண்டிருந்த) உபைய் பின் இமாரா (ரலி) அவர்கள் ஏழு என்று எண்ணிக்கையை அடைந்த போது அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் 'ஆம், உமக்கு தோன்றிய நாட்கள் (வரை) என்று பதிலளித்தார்கள்' என்று அறிவிக்கிறார்.

இமாம் அபூதாவூத் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
மேலுள்ள முதல் அறிவிப்பாளரான யஹ்யா பின் அய்யூப் என்பாரின் 'இஸ்னாதில்' கருத்து வேற்றுமை காணப்படுவதோடு இவர் ஹதீஸில் வல்லுனராக இல்லை.

பாடம்: 61 ஜவ்ரபின் மீது மஸஹ் செய்தல்.

(ஜவ்ரப் என்பது காலுறைகளுக்கு மேல் அணியக் கூடிய கரண்டைக்கு மேல் உயரமான பெரிய காலணியாகும்.)

ஹதீஸ் எண்: 159
அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் உலூச் செய்தார்கள். அவர்கள் (சில சமயங்களில்) ஜவ்ரபின் மீதும், (சில சமயங்களில்) செருப்புகள் மீதும் மஸஹ் செய்தார்கள்.

அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்கள்.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்.
அப்துர்ரஹ்மான் பின் மஹ்திய்யா அவர்கள் இந்த ஹதீஸை அறிவிப்பதில்லை. காரணம் முகீரா (ரலி) அவர்களிடம் இருந்து அறிவிக்கப்படும் தெளிவான ஹதீஸ் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காலுறை மீது மஸஹ் செய்தார்கள் என்பது தான்.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஜவ்ரபின் மீது மஸஹ் செய்தார்கள் என்று மீண்டும் இந்த ஹதீஸை அண்ணல் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூமூஸா அல் அஸ்அரீ அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படுகின்றது. ஆனால் தொடர்பு அறுந்ததாகவும் பலமற்றதாகவும் உள்ளது.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்.
அலீ பின் அபூதாலிப், இப்னு மஸ்வூத், பராபின் ஆஸிப் அனஸ் பின் மாலிக், அபூஉமாமா, சஹ்ல் பின் சஃது, அம்ர் பின் ஹுரைஸ் ஆகியோர் ஜவ்ரபின் மீது மஸஹ் செய்துள்ளனர். இதை உமர் பின் அல்கத்தாப், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தும் அறிவிக்கப்படுகின்றது.

பாடம்: 62

ஹதீஸ் எண்: 160
அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் உலூச் செய்தார்கள். தனது செருப்புகளின் மீதும், பாதங்களின் மீதும் மஸஹ் செய்தார்கள்.

அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அபூஅவ்ஸ் அத்தகரீ அவர்கள்.

முஸத்தத் அவர்களும், அப்பாத் அவர்களும் இணைந்து அறிவிக்கும் இந்த ஹதீஸில் 'அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களை ஒரு கூட்டத்தினரின் சிறு ஊற்றுகள் அடங்கிய நீர் துறைக்கு (உலூச் செய்யும் இடத்திற்கு) வரக் கண்டேன்' என்று அறிவிக்கின்றார்.

(அவ்ஸ் கூறியதாக) அப்பாத் அவர்கள் தனியாக அறிவிக்கின்றார். சிறு ஊற்றுகள் அடங்கிய நீர்துறை உலூச் செய்யுமிடம் என்று முஸத்தத் தனது அறிவிப்பில் குறிப்பிடவில்லை. 'அவர்கள் உலூச் செய்தார்கள், தனது இரு செருப்புகளின் மீதும், பாதங்களின் மீதும் மஸஹ் செய்தார்கள்' என்று இருவரும் கூட்டாக அறிவிக்கின்றனர்.