ஹதீஸ் எண்: 381
அப்துல்லாஹ் பின் மஃகில் பின் முகர்ரின் அவர்கள் சொன்னார்கள்.
ஒரு காட்டரபி நபி (ஸல்) அவர்களோடு தொழுதார். அதன் பிறகு அவர் ஹதீஸ் முழுவதையும் அறிவித்தார். 'அவர் சிறுநீர் கழித்த மண்ணை அகற்றி விட்டு அந்த இடத்தில் தண்ணீரை ஊற்றுங்கள்' என்று அந்த ஹதீஸில் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.
இமாம் அபூதாவூது அவர்கள் சொன்னார்கள். இது முர்ஸலான அறிவிப்பாகும். (அதாவது, அறிவிப்பாளர் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாக அறிவிக்கிறார், ஆனாலும் அவர் அவர்களை கண்டதில்லை) இப்னு மஃகில் அவர்கள் நபி (ஸல்) அவர்களைக் கண்டதில்லை.
பாடம்: 139 காய்ந்து விட்டால் மண் தூய்மையானதாகும்ஹதீஸ் எண்: 382
இப்னு உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நான் பள்ளிவாசலில் தூங்குவேன், அப்போது நான் இளமையாகவும் திருமணம் ஆகாமலும் இருந்தேன். அப்போது நாய்கள் அடிக்கடி பள்ளிவாசலுக்கு வரும், அங்கே சிறுநீரும் கழிக்கும், ஆனால் யாரும் அதன் மீது தண்ணீர் தெளிக்க மாட்டார்கள்.
பாடம்: 140 விளிம்பில் இரத்தக்கரை படிந்த ஆடை.
ஹதீஸ் எண்: 383
இப்ராஹீம் பின் அப்துர்ரஹ்மான் பின் அவ்ப் அவர்களின் அடிமைத்தாய் நபி (ஸல்) அவர்களின் மனைவியாகிய உம்மு ஸல்மா (ரலி) அவர்களிடம் கேட்டார்கள்.
(தரையில் இழுபடும் அளவுக்கு) நீண்ட ஆடையை அணியக்கூடிய பெண்ணாக நான் இருக்கிறேன். நான் அசுத்தமான இடங்களில் நடந்து செல்கிறேன். (அப்போது நான் என்ன செய்ய வேண்டும்?)
அதற்கு உம்மு ஸல்மா (ரலி) அவர்கள், 'அதன்பிறகு வரக்கூடியது (சுத்தமான இடம்) அதை சுத்தப்படுத்தி விடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்' என்றார்கள்.
ஹதீஸ் எண்: 384
பனூ அப்துல் அஸால் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் அறிவிக்கிறார்:
பள்ளிக்குச் செல்லும் நமது தெரு அசுத்தமாக உள்ளது, மழை பெய்து விட்டால் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், 'தெருவின் அசுத்தமான பகுதியை அடுத்து சுத்தமான பகுதி இருக்கிறதா இல்லையா?' என்று கேட்டார்கள். 'ஏனில்லை' என்று அவர் பதில் சொன்னார். 'ஒன்று மற்றதை சரிசெய்து விடும்' என்று சொன்னார்கள்.
பாடம்: 141 செருப்பில் பட்ட அசுத்தம்
ஹதீஸ் எண்: 385
செருப்பணிந்து கொண்டு ஒருவர் அசுத்தமான இடத்தை கடக்க நேர்ந்தால் மண் அதை சுத்தப்படுத்திவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஹதீஸ் எண்: 386
முந்தைய ஹதீஸ் போன்றே நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் இந்த ஹதீஸை அறிவிக்கிறார்கள். இதில், 'ஒருவர் செருப்பணிந்து கொண்டு அசுத்தத்தை கடந்து செல்ல நேர்ந்தால் மண் அதை சுத்தப்படுத்தி விடும்' என்றுள்ளது.
ஹதீஸ் எண்: 387
அதே போன்ற ஹதீஸை நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம்: 142 அசுத்தம் பட்ட ஆடையுடன் தொழுதால் மீண்டும் தொழுவது
ஹதீஸ் எண்: 388
உம்மு ஜஹ்தர் அல்அமீரிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
உம்மு ஜஹ்தர் அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ஆடையில் பட்ட மாதவிடாய் இரத்தம் பற்றி கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'நான் அல்லாஹ்வின் தூதரோடு இருந்தேன், எங்கள் மீது ஆடை இருந்தது மேலும் நாங்கள் போர்வையை போர்த்தியிருந்தோம். அதிகாலையில் நபி (ஸல்) அவர்கள் போர்வை எடுத்து உடுத்திக் கொண்டு வெளியேறிச் சென்று பஜ்ர் தொழுகையை தொழுதார்கள். அவர்கள் (பள்ளியில் மக்கள் மத்தியில்) அமர்ந்திருந்தார்கள். அப்போது ஒருவர், 'அல்லாஹ்வின் தூதரே! இது இரத்தக்கரை' என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைச் சுற்றிப் பிடித்து மடித்து ஓர் அடிமையிடம் கொடுத்து என்னிடம் அனுப்பி வைத்தார்கள், மேலும், 'அதைக் கழுவி காயவைத்து என்னிடம் அனுப்பி வை' என்றார்கள். என்னுடைய பாத்திரத்தை அனுப்பி அதைத் துவைத்து, பிறகு நான் அதை காயவைத்து அவர்களிடம் திரும்ப அனுப்பி வைத்தேன். நபி (ஸல்) அவர்கள் அந்த போர்வையை போர்த்திக் கொண்டு மதியம் திரும்பி வந்தார்கள்.(குறிப்பு: இது பலவீனமான ஹதீஸ் என்று ஷேக் நாஸிருத்தீன் அல்பானி (ரஹ்) கூறுகிறார்கள்.)
பாடம்: 143 ஆடையின் மீது எச்சில் உமிழ்வது.
ஹதீஸ் எண்: 389
அபூ நத்ரா அறிவிக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் தனது ஆடையின் மீது உமிழ்வார்கள், மேலும் அதன் பகுதியால் கசக்கி விடுவார்கள்.
(குறிப்பு: அபூ நத்ரா என்பவர் தாபிஈ ஆவார். அதனால் இந்த ஹதீஸ் முர்சல் எனும் தொடர்பு அறுந்ததாகும், ஏனென்றால் நபித்தோழர் விடுபட்டுள்ளார்.)
ஹதீஸ் எண்: 390
இதே போன்ற ஹதீஸ் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அனஸ் (ரலி) வழியாக வேறு அறிவிப்பாளர் வரிசையுடன் அறிவிக்கப்படுகிறது.
Labels:
அபூதாவூது