ஒருவர் தம் உணவு (வாழ்வாதாரம்) தமக்கு அதிகரிக்கப்படவும், தம் ஆயுள் தமக்கு நீட்டிக்கப்படவும் விரும்பினால் அவர் தம் உறவினரை இணைத்து வாழட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம்
நிச்சயமாக அல்லாஹ், படைப்புகளைப் படைத்து முடித்தபோது `உறவு எழுந்து நின்றது. (என்னைத்) துண்டித்துக் கொள்வதைவிட்டு உன்னிடம் பாதுகாப்புக் கோரும் இடம் இது என்று கூறியது. ஆம்1 உன்னைச் சேர்த்துக்கொள்பவனை நானும் சேர்ப்பேன். உன்னைத் துண்டிப்பவனை நானும் துண்டிப்பேன் என்பதை நீ திருப்தியுறவில்லையா? என்று அல்லாஹ் கேட்டான். திருப்திதான் என உறவு கூறியதும், உனக்கு அது உண்டு என்று அல்லாஹ் கூறினான் என நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, பின்பு, நீங்கள் விரும்பினால் (பின்வரும்) இறைவசனத்தை ஓதுங்கள் என்றும் கூறினார்கள்.
நீங்கள் பொறுப்பாளர்களாக வந்துவிட்டால் பூமியில் நீங்கள் குழப்பம் செய்திடவும், உங்களின் இரத்தத் தொடர்புடையவர்களை நீங்கள் துண்டித்துக் கொள்ளவும் விரும்புகிறீர்களா? (துண்டிக்கும்) அவர்களை அல்லாஹ் சபித்துவிட்டான். அவர்களைச் செவிடாக்கிவிட்டான். அவர்களின் பார்வைகளைக் குருடாக்கி விட்டான். (47: 22-23) அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம்
உறவு என்பது, அர்ஷைப் பிடித்துக்கொண்டு, என்னை இணைத்து வாழ்பவரை அல்லாஹ் இணைத்துக்கொள்வான். என்னைப் பிரித்துவிடுபவரை அல்லாஹ்வும் பிரித்துவிடுவான் என்று கூறும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம்
பிரதி உபகாரம் (உதவிக்கு உதவி) என வாழ்பவர், உறவை இணைத்து வாழ்பவர் அல்லர். எனினும் தன் உறவினர் தம்மைத் துண்டித்தாலும், இணைத்து வாழ்பவரே உறவை இணைத்து வாழ்பவர் ஆவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரலி), நூல்: புகாரீ
நபி (ஸல்) அவர்களிடம், இறைத்தூதர் அவர்களே! சொர்க்கத்தில் என்னை நுழையச் செய்கின்ற, நரகத்திலிருந்து என்னைத் தூரமாக்கிவிடுகின்ற ஒரு செயலை என்னிடம் கூறுங்கள் என்று ஒருவர் கேட்டார். நீர் அல்லாஹ்வை வணங்குவீர்; எதையும் அவனுக்கு இணையாக்காதீர்; தொழுகையைப் பேணுவீர்; ஸகாத்தைக் கொடுப்பீர்; உறவினரை இணைத்து வாழ்வீர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: காலித் இப்னு ஸைத் அல்அன்ஸாரீ (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம்
உங்களுள் ஒருவர் நோன்பு துறந்தால், ஒரு பேரீத்தம் பழத்தால் நோன்பைத் துறக்கட்டும். அதுவே அபிவிருத்தி தரும். ஒரு பேரீத்தம் பழம் இல்லையென்றால், தண்ணீர் (மூலம் நோன்பு துறக்கட்டும்); அதுவே சுகாதாரமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, ஏழைக்குத் தர்மம் தருவது, ஒரு தர்ம(க் கூலி)தான். உறவினருக்குத் தர்மம் வழங்குவது இரண்டு (கூலி)களாகும். ஒன்று தர்மம்; மற்றொன்று உறவை இணைத்து வாழ்தல் என்றும் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: சல்மான் இப்னு ஆமிர் (ரலி), நூல்: திர்மிதீ