ஹதீஸ் எண்: 271
நான் மாதவிலக்கடைந்து விட்டால் விரிப்பை விட்டு விலகி பாய்க்கு வந்து விடுவேன். நாங்கள் சுத்தமாகும் வரை அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களை நெருங்கவும் மாட்டோம் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்.
ஹதீஸ் எண்: 272
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மாதவிலக்கானவரிடம் எதையும் விரும்பினால் அ(ம்மனைவியருடைய)வருடைய மறைவுறுப்பில் ஆடை இருக்கச் செய்வார்கள்.அறிவிப்பவர்: அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மனைவியருள் ஒருவர்.
(குறிப்பு: இதன் இஸ்நாத் மிகவும் வலுவானது என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் பத்ஹுல் பாரியில் குறிப்படுகின்றார்.)
ஹதீஸ் எண்: 273
எங்களுடைய மாதவிடாய் பெருக்கெடுக்கும் போது அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் எங்களை இடுப்பாடை உடுத்தும் படி கட்டளையிடுவார்கள். பிறகு எங்களை கட்டியணைப்பார்கள். உங்களில் யார் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தேவையை கட்டுப்படுத்துவது போன்று தனது தேவையை கட்டுப்படுத்த முடியும்? என்று கூறினார்கள்.அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரலி).
பாடம்: 108 சூதக இரத்தம் காணும் பெண்மணி தொழுகையை விடலாமா?
ஹதீஸ் எண்: 274
ஒரு பெண்மணிக்கு அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் சூதக ரத்த கசிவு அதிகமாகி விட்டது. அவளுக்காக உம்மு ஸலமா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களிடம் மார்க்கத் தீர்ப்புக் கோரினார்கள். அப்போது அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) பின்வருமாறு கூறினார்கள். இப்போது அவளை பிடித்திருக்கும் இது (இந்த சூதக இரத்தப்போக்கு) அவளுக்கு ஏற்படுவதற்கு முன்பு ஒரு மாதத்தில் அவள் (வழமையாக) மாதவிலக்கான அந்த இரவு, பகல்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு (இப்போது) ஒரு மாதத்தில் அந்த அளவிற்கு தொழுகையை விட்டு விடுவாளாக! அந்த (நாட்கள்) அளவை அவள் கடந்ததும் குளித்து, கட்டிக் கொள்வாளாக!அறிவிப்பாளர்: உம்மு ஸல்மா (ரலி).
(குறிப்பு: இந்த ஹதீஸ் ஹஸன் ஆகும் என்று ஹாபிழ் முன்திரி அவர்கள் கூறுகின்றார்கள்.)
ஹதீஸ் எண்: 275
ஒரு பெண்மணிக்கு சூதக இரத்தப் போக்கு ஏற்பட்டு விட்டது என்று இதன் அறிவிப்பாளர் மேலுள்ள ஹதீஸின் கருத்தை கூறும் போது 'அந்த (நாட்கள்) அளவை அவள் கடந்ததும், தொழுகை (நேரம்) வந்தவுடன் அவள் குளிப்பாளாக! என்று மீதி உள்ள ஹதீஸை அதே கருத்தை போன்றே தொடர்ந்து இங்கும் தெரிவிக்கின்றார்.அறிவிப்பாளர்: உம்மு ஸல்மா (ரலி).
(குறிப்பு: இதை இமாம் நஸயீ, இப்னுமாஜா ஆகியோர் பதிவு செய்துள்ளார்கள். இந்த தொடரில் அறியப்படாத ஒருவர் இடம் பெறுகின்றார்.)
ஹதீஸ் எண்: 276
ஒரு பெண்மணிக்கு சூதக இரத்தப் போக்கு ஏற்பட்டு விட்டது என்று இதன் அறிவிப்பாளர் லைஸ் அவர்களின் கருத்தை கூறும் போது அந்த (நாட்கள்) அளவை அவள் கடந்ததும், தொழுகை (நேரம்) வந்தவுடன் அவள் குளிப்பாளாக! என்று அறிவித்து மீதி உள்ள ஹதீஸை அதே கருத்தில் தொடர்கிறார்.அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்லமா.
(குறிப்பு: இங்கே 277 முதல் 296 வரையிலான ஹதீஸ்கள் விடுபட்டுள்ளன, பின்னர் மொழிபெயர்ப்பு செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்)
ஹதீஸ் எண்: 297
சூதக இரத்தப் போக்குள்ளவர் தொடர்பாக அவர் தனது மாதவிடாய் நாட்களில் (மட்டும்) தொழுகையை விட்டு விடுவாராக! பிறகு குளித்து, தொழுவாராக! மேலும், ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய்தல் வேண்டும் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பாளர்: முஹம்மது ஜாபிர் பின் ஜியாத்.
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்: உஸ்மான் பின் அபீஷைபா 'அவர் நோன்பு நோற்பாராக மேலும் தொழுவாராக!' என்று கூடுதலாக அறிவிக்கின்றார்.
(குறிப்பு: இந்த ஹதீஸை இமாம் திர்மிதி, இப்னுமாஜா ஆகியோரும் தமது நூற்களில் பதிவு செய்துள்ளனர். கூபா நகரின் நீதிபதியான ஷரீக் என்பாரை அனேகர் குறை கூறியுள்ளனர். கூபா நகரத்தைச் சார்ந்த அபூல் யக்லான் என்ற உஸ்மான் பின் அபீர் என்பாரின் ஹதீஸை ஆதாரமாக கொள்ளப்படாது.)
ஹதீஸ் எண்: 298
பாத்திமா பின்த் அபீஷுபைஷ் (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள் என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள் என்று இதன் அறிவிப்பாளர் அவர்களுடைய நிகழ்ச்சியைத் தெரிவிக்கின்றார். 'பிறகு நீ குளித்துக் கொள், பிறகு ஒவ்வொரு தொழுகைக்கும் நீ உளூச் செய்து, தொழுது கொள்' என்று கூறியதாகவும் அறிவிக்கின்றார்.அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரலி).
ஹதீஸ் எண்: 299
சூதக இரத்தப் போக்குள்ளவர் தொடர்பாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் 'அப்படிப்பட்டவர் (ஒரு தடவை மட்டும் குளிப்பாராக! பிறகு தனது மாதவிடாய் நாட்கள் வரை உளூச் செய்வாராக' என்று கூறுகின்றார்கள்.அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரலி).
ஹதீஸ் எண்: 300
இதைப் போன்று அண்ணல் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மஸ்ரூக் அவர்களின் மனைவி இப்னு ஷுர்மா அய்யூப் அபுல்அலா யசீத் வழியாக அஹ்மத் பின் ஸினான் அறிவிக்கின்றார்.இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்: அதீபின் சாபித் அவர்களுடைய (297வது) ஹதீஸ், ஹபீப் அவர்களிடமிருந்து அஃமஷ் அறிவிக்கின்ற (298வது) ஹதீஸ், அய்யூப் அபில்அலா அவர்களுடைய (330வது) ஹதீஸ் ஆகிய அனைத்து ஹதீஸ்களும் பலஹீனமானவையே! சரியானவை அல்ல. ஹபீப் அவர்களிடமிருந்து அஃமஷ் அவர்கள் அறிவிக்கின்ற இந்த ஹதீஸை ஹப்ஸ் பின் கியாஸ் அவர்கள் மவ்கூபாக (அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுடன் இத்தொடரை நிறுத்தி) அறிவித்திருப்பது இந்த ஹதீஸ் பலவீனமானது தான் என்பதை தெரிவிக்கின்றது. மேலும் ஹப்ஸ் பின் கியாஸ் அவர்கள் ஹபீப் அவர்களுடைய ஹதீஸை மர்பூஆக (அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக) அறிவிப்பதை மறுத்துரைக்கின்றார்கள். மேலும் இந்த ஹதீஸை அஸ்பாத் அவர்கள் அஃமஷ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் போது ஆயிஷா (ரலி) அவர்களுடன் நிறுத்தப்பட்டது (மவ்கூப் ஆனது) என்றே அறிவிக்கின்றார்.
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்: இந்த ஹதீஸின் (ஒவ்வொரு தொழுகைக்கும் உளூ ச் செய்ய வேண்டும் என இடம் பெறாத) முந்தைய பகுதியை இப்னுதாவூத் அவர்கள் அஃமஷ் அவர்களிடமிருந்து மர்ஆ ஆனதாக அறிவிக்கின்றார். மேலும் அதில் ஒவ்வொரு தொழுகைக்கும் உளூ செய்ய வேண்டும் என்று இடம் பெற்றிருப்பதை அவர் மறுத்துரைக்கின்றார். இந்த ஹபீப் (அவர்களிடமிருந்து அஃமஷ்) அறிவிக்கின்ற ஹதீஸ் பலவீனமானது என்பதை அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து உர்வா வழியாக ஜுஹ்ரி அறிவிக்கும் ஹதீஸ் தெரிவிக்கின்றது. சூதக இரத்தப் போக்குள்ளவர் தொடர்பாக அன்னையார் அவர்கள் அந்த ஹதீஸில் 'அவர் ஒவ்வொரு தொழுகைக்கும் குளிப்பவராக இருந்தார்கள்' என்று அறிவிக்கின்றார்.
அலீ (ரலி) அவர்களிடமிருந்து தன் தந்தையார் வழியாக அறிவிக்கும் அதிபின் சாபித் அவர்களிடமிருந்து அபுல்யக்யான் அவர்களும், இப்னு அப்பாஸ் அவர்களிடமிருந்து பனூஹாஷிம் கிளையாரின் அடிமை அம்மார் அவர்களும், அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து கபீர் அவர்களுடைய ஹதீஸ் மூலம் ஷுஃபி வழியாக அப்துல் மாலிக் பின் மைஸ்ரா, பயான், முகீரா, பிராஸ், முஜாலித் ஆகிய அனைவரும் '(சூதக இரத்தப் போக்குள்ள அப்பெண்மணியை நோக்கி நீ ஒவ்வொரு தொழுகைக்கும் உளூ ச் செய்ய வேண்டும்' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றனர்.) ஒவ்வொரு நாளும் அவள் ஒரு தடவை குளிக்க வேண்டும் என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து கமீர் மூலம் ஷுஃபீ வழியாக தாவூத், ஆஸிம் ஆகியோரின் அறிவிப்பு தெரிவிக்கின்றது. ஹிஷாம் பின் உர்வா தன் தந்தை வாயிலாக, சூதக இரத்தப் போக்குள்ளவர் ஒவ்வொரு தொழுகைக்கும் குளிப்பாராக என்று அறிவிக்கின்றார். இந்த ஹதீஸ்கள் அனைத்துமே பலஹீனமானவை. ஆனால், கமீர், பனூஹிஷாம் கிளையாரின் அடிமை அம்மார், தன் தந்தை வழியாக அறிவிக்கும் ஹிஷாம் பின் உர்வா ஆகிய(மூ)வர்களின் ஹதீஸ்களைத் தவிர! ஆனால் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுகின்ற தெளிவான கருத்து (ஒவ்வொரு தொழுகைக்கும்) குளிக்க வேண்டும் என்பது தான்.
(குறிப்பு: இமாம் அபூதாவூத் அவர்கள் இப்பாடத்தில் ஒன்பது அறிவிப்புக்களை தெரிவிக்கின்றார்கள். இவற்றில் 297வது ஹதீஸ், 298வது ஹதீஸ், 300வது ஹதீஸ் ஆகியவை மர்பூஃ ஆனவை. 299வது ஹதீஸ் துணை எண் குறிக்கப்பட்ட ஒன்றிலிருந்து 5வது வரை உள்ள ஹதீஸ்கள் ஆகிய இந்த ஆறு ஹதீஸ்கள் மவ்கூபானவையாகும். இமாம் அபூதாவூத் அவர்கள், இவை அனைத்துமே பலஹீனமானவையே, ஆனால் மேல் குறிப்பிட்ட அம்மூவர் அறிவிக்கின்ற ஹதீஸ்களை தவிர என்று தெரிந்து இம்மூன்றில் இப்னு அப்பாஸ் அவர்களிடமிருந்து பனூஹாஷிம் கிளையாரின் அடிமை அம்மார் அறிவிக்கின்ற ஒவ்வொரு தொழுகைக்கும் நீ உளூ ச் செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்கர் வெறுக்கப்பட்டவை என்ற வகையில் சேர்க்கின்றார்கள் காரணம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுகின்ற தெளிவான கருத்து மஃரூப் குளிக்க வேண்டும் என்று கூறியதனால் மஃரூபிற்கு எதிராக அமையக் கூடிய கருத்து முன்கரே ஆகும். முன்கரும் பலவீனம் லயீப் என்ற வகையைச் சேர்ந்ததால் பலவீனத்தை விட்டும் நீக்கிய கருத்துக்கள் இங்கு இரண்டு தான். ஒன்று கமீர் அறிக்கும் கருத்து, இன்னொன்று தன் தந்தை வழியாக அறிவிக்கும் ஹிஷாம் பின் உர்வாவின் கருத்தாகும்.)
Labels:
அபூதாவூது